நாகையநல்லூர் சமையல்காரன்
======================
அது 2000த்துக்கு முன்பு. அப்போது வேலையில் சம்பாதித்த 2ம் மாதம். முதல் மாதம் அம்மாவுக்கு புடவை. ரெண்டாம் மாதம் சம்பளத்தில் காலேஜ் ஜுனியர் சங்கருக்கு ட்ரீட். சும்மாவா? ஒரு செமெஸ்டர் முழுக்க அவன் ரூமில் ப்ரீயாகத் தங்க இடம் கொடுத்தவன். ஜீன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும் வாங்கிக்கொண்டு அண்ணா பல்கலை, கிண்டிக்கு சென்றேன். காந்தி மண்டபத்தில் பஸ் இறங்கி யுனிவர்சிட்டி வாயிலில் நுழைந்து தென்மேற்காக நூலகத்தையும் தண்ணீரே கண்டிராத நீச்சல் குளத்தையும் தாண்டி நடந்தால் ஹாஸ்டல்தான். அவனை சந்தித்தேன். அவன் சொன்னதுதான் "நாகையநல்லூர் சமையல்காரன்". சங்கரா, இப்போ எல்லாம் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பாடு எப்படி இருக்குது? என்றேன்.
"வழக்கம் போலத்தான். நடுவில ஒரு மாசம் சூப்பர் டேஸ்ட் இருந்தது. மறுபடியும் சகிக்கல".
உயர்ந்து வளர்ந்திருந்த தூங்குமூஞ்சி மரங்களின் நிழலில் நடக்க ஆரம்பித்தோம்.. பேச்சும் தொடர்ந்தது.. "ம்ம்..ஒரு மாசம் மட்டுமா? எப்படி?"
நாகையநல்லூர்லேர்ந்து ஒரு சமையல் காரன் வந்திருந்தான். அய்யரு போலிருக்கு... யப்பா... என்ன ஜாலம் பண்ணினானோ தெரியல.. தோசைல தங்க நிறத்துல வெந்தய வாசனை மணக்கும்.. அதுமாதிரி சாம்பார் நான் யுனிவர்சிட்டில சேர்ந்ததில் இருந்து சாப்பிட்டதே இல்லை.. .. ரசம் தேவலோகத்துலேர்ந்து வந்தா மாதிரி.. தனித்தனியா கருவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, பெருங்காயம்னு மணக்கும்ங்க... .தனித்தனியான்றேன்..... தனித்தனியா வாசனை தெரியும்....என்ன பண்ணினான்னே தெரியல.. அவன் கைல பத்து விரலுக்கும் மோதிரம் போடணும்.. அவன் சொர்கதுலேர்ந்து வந்தவனுங்க..
சொர்க்கத்துலேர்ந்தா? நாகையநல்லூர்னியே?
நீங்க வேற கடிக்காதீங்க.. சொல்றதை கேளுங்க.. எல்லா ஐட்டமும் செம டெஸ்ட்.. நான்லாம் ஹாஸ்டல் மெஸ்ல ரெண்டு தோசை மேல கருமத்தை தின்ன மாட்டேன்.. அதுவும் எத்தையாவது தின்னு தொலைக்கணுமேன்னு தின்னுட்டு கெளம்பிருவேன். நாகையநல்லூர் அய்யர் கை டேஸ்ட்ல நாலு தின்னேன்.. தோசைன்னு இல்ல, உப்புமா, பொங்கல், பொரியல் எதெடுத்தாலும் சான்ஸே இல்ல.. சப்பாத்தியோட தக்காளி கடலை மாவு சப்ஜி.... கத்திரிக்கா பயத்தம் சாம்பார், செய்வாம் பாருங்க... இட்லி புடிக்காத நானே தொட்டுக்கிட்டு ஆறு தின்னேன்...
"அந்த ஆளுக்கு ஏதாவது பிரமோஷன் கொடுத்தாங்களா?" என்றேன். பழக்கமான நாய் ஓடி வந்து வாலாட்டியது. போன வருஷம் நாய் போட்டிருந்த குட்டிகள் இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தன. அவை தூரத்தில் நின்று சந்தேகத்தோடு வாலாட்டின.
பிரமோஷனா? கிழிச்சானுங்க.. தலை கீழா நடந்தது.. நீங்க குறுக்க பேசாமே கேளுங்க ஜெய்...
சூப்பர் டேஸ்ட்னால பசங்க எல்லாரும் உட்காந்து கார்த்தாலை 9 வரைக்கும் சாப்ட்டானுங்களா.. .. மெஸ் வெளில கியூ வெயிட்டிங்.. கிளாஸுக்கு லேட் ஆச்சு.. எப்பவும் மெஸ் பில்லு அறுநூறு ரூவாதான் வரும்.. அந்த மாசம் மளிகை சாமான் அதிகமாகி எழுநூத்தி நாப்பது வந்தது..
வார்டன் சாம்ராஜ் மெஸ்சுக்கே வந்தாரு.. அய்யரை கூப்புட்டு "எலேய் என்ன பெரிய மயிராட்டம் சமக்கியாமா?.. உனக்கு முன்னாடி இருந்தவங்க சமைக்கா மாதிரி நீயும் பண்ணுலே.. எல்லாருக்கும் ரெட்டை சோலி வெக்கியாம்"
"சார், அவா தட்டெல்லாம் சுத்தமா அலம்பறது இல்லே.. சாதம் சமைக்கற பாத்திரத்துலயே எச்சைதட்டெல்லாம் போட்டுடறா. சுண்ணாம்பு பவுடர்லாம் கலக்கறா.. அப்படி பண்ணினா ஸ்டுடென்ட்ஸ் வயிறுகெட்டுடும் சார்..கொஞ்சம் சாப்பிட்டாலே எழுந்துடுவா". "எலேய் பசங்க இங்க படிக்க வர்றாங்களா இல்லை தின்னுட்டு பேள வர்ரானுங்களா? பசங்க பத்து நிமிஷம் மேல சாப்பிடக்கூடாதுன்னு தானே சொல்றோம். குனுக்கு வலிக்க சமைச்சா பத்தாதுலே.. புத்தி வேணும்" ன்னு ஆரம்பிச்சு ரொம்ப மரியாதை இல்லாம பேசிட்டாரு. அய்யர் "என் தோப்பனார் சொல்லி குடுத்த வித்தையை கடமை தவறாம செய்யறேன்.. யாரும் 10 வருஷமா குத்தம் சொல்லலை.. நீங்கோ மட்டும் ஏன் சார் கோவிச்சுக்கறேள்?" னு கேட்டார். "ஏலேய், நான் சொல்லுதது உனக்கு விளங்குதா இல்லையா? ஒன் அப்பன் வித்தை மயித்தை சொல்லிக் கொடுத்தான்குற ..ஒன் அப்பனா ஒரு ஸ்டுடென்ட்டுக்கு 140 ரூவா அதிகமா கட்டுவான்?.." அய்யருக்கு கண்லாம் கலங்கி போச்சு... குரலுடைய "ஸார் அவன் இவன்லாம் போயிட்டவாள பத்தி பேசாதேள்.. ஜட்ஜ், கலெக்டர் வீட்டுக்கெல்லாம் கூட போயி சமைச்சிருக்கேன் , யாரும் இப்படி பேசினதில்ல".
கண்ணீரைப் பார்த்து இறங்கின வார்டன் சொன்னாரு "கேளுவே, சமையல்ல டேஸ்ட் இருக்க கூடாது, பசங்களுக்கு சாப்பிடவே பிடிக்க கூடாது, 330 பேரு 12 லேர்ந்து 1க்குள்ள லன்ச் முடிக்கணுமில்லா? வந்தான்ன்னா சாப்புட்டு ருசியே இல்லை கருமம்ன்னுட்டு அஞ்சே நிமிசத்தில வெளில போயிரணும்.. அப்போதாம்வே நம்ம ரிசர்வ்ல நாலு காசு மிஞ்சும்..ஆடிட் பிரச்சனை வராது...நீ நல்லா சமைச்சு ஸ்டுடென்ட்ஸ் தின்னுட்டு தெனவெடுத்துப் போயி இருந்தாம்னா படிக்க மாட்டானுவ..கலாட்டா செய்வானுங்க.. "
"ஸார், என் தொழில் தர்மத்தை, கத்துண்ட வித்தையை மீற மாட்டேன் சார், கைப்பக்குவம்லாம் பகவான் பரம்பரையா அனுக்ரஹம் பண்ணினது. இங்க படிக்கற பசங்க எல்லாம் சரஸ்வதி கடாட்சத்துக்காக பெத்த அம்மா சமையலை விட்டுட்டு வர்றா; எங்கெங்கேர்ந்தோ வந்து படிக்கற குழந்தேள் கிட்டேர்ந்து சுபோஜனத்தை பறிக்கப்படாது.. நான் கடமையை விடாம சரியாத்தான் செய்வேன்.. வேணும்னே மட்டமால்லாம் சமையல் செய்ய என்னால முடியாது.. "
"அப்புடியா ஸார்வாள்.... பாப்பன்ற திமிரு போல... அப்போ நீ தட்டு கழுவுலே.. இனி எச்சை தட்டு எடுத்து தட்டு டேபிள்லேர்ந்து எடுக்கறது, களுவறதுதாம்லே உன் வேலை. இன்னிலேர்ந்து சமையலை ஏளுமலை , இசக்கி பாத்துப்பானுவ"..
மறுபடியும் நான் பேசினேன்...ஏன் சங்கர், எதுக்கு முதல்ல அந்த அய்யரு நம்ம ஹாஸ்டலுக்கு வந்தான்? அசிங்கப் படறான்? எதுக்கு இவ்ளோ கடமையுணர்ச்சி, தொழில் தர்மம் பொருத்தமில்லாத இடத்துல?
சங்கர் பேச்சில் மாற்றம் தெரிந்தது. சமையல் காரனை அவர் என்றும் வார்டனை அவன் என்றும் சொல்லிப் பேச ஆரம்பித்தான்.
நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் போயி வார்டன் கிட்ட பேசினோம்.கொஞ்சமும் மசியலை . "நீ ருசிக்காக 140 அதிகம் கொடுப்பே. மத்தம 330 பசங்களுக்கும் சேத்து நீ 46,000 கொடுப்பியாவே? ஒவ்வொருத்தனும் 1 மணி நேரம் சாப்பிடுதான்..எல்லாரும் உக்காந்து மொக்கின அப்புறம் கடைசி ஆளா நீ சாப்பிடணும். செய்வியா?"ன்னான். அப்புறம் அய்யர் கிட்ட போனோம். என்னய்யா ஜட்ஜ், கலெக்டர்ங்கற என்னத்துக்கு கம்மி சம்பளத்துக்கு இங்க ஹாஸ்டல் கேன்டீன்ல சமைக்கறீரு ன்னோம் . அப்போதான் உண்மையான கதை தெரிஞ்சது... அய்யரோட அம்மாவுக்கு உணவுகுழாய்ல கேன்சராம்.. அது தெரியாம 6 மாசம் வீட்டுல வேலைக்கு போவாம அம்மாவை கவனிச்சுகிட்டு இருந்திருக்கார். அப்புறம் இப்போ கிண்டி கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல அட்மிட் பண்ணிட்டு, தொண்டைல டியூப் வச்சு தான் ஆகாரம். தங்க இடம் இல்ல, லாட்ஜுக்கு பணம் இல்ல.. என்ன பண்ணுறதுன்னு யோசிச்சு தூங்க எடத்துக்காகவே பக்கத்துலேயே நம்ம ஹாஸ்டல் மெஸ்ல வேலைக்கு சேந்துட்டார்.. அப்படியே ஹாஸ்டல்லயே ஓரமா வாட்ச் மேனோட தங்கிக்கலாம்னு பிளான் பண்ணிருக்கார்... வீட்டு வாடகை, ஆட்டோ சார்ஜ் மிச்சம். அதனாலதான் குறைஞ்ச சம்பளம், அவமானம், கடுமையான வேலையெல்லாம் தாங்கிகிட்டு இங்கயே கெடந்தார்.
ஆமாம்.. ஆனா அவரோட தொழில் தர்ம உணர்ச்சி, அவரை நிம்மதியா இருக்க விடல. எதுக்கு அய்யரோட கடமை உணர்வை திட்டனும்? திட்டினாலும் இந்த வார்டனைத்தான் திட்டனும்.. அப்படியே இந்த எச்சைப் பாத்திரம், தட்டு எல்லாம் கழுவிட்டு இருந்தார் அய்யர்; வேலைய முடிச்சுட்டு ரெண்டரை மூணு வாக்குல அம்மாவப் பார்க்க கேன்ஸர் இன்ஸ்டிடியூட் போவாரு.. போவரத்துக்கு நான் என்னோட சைக்கிளை கூட கொடுத்திருந்தேன்... அப்புறம் ஆறரைக்கு திரும்ப வந்து வேலை செய்வார்.. ஆனாலும் ரெண்டு மாசம் கழிச்சு வார்டன் வார்டன் விடல...
ஞாயிறு காத்தால சர்ச்சுக்கு போக டிரஸ் பண்ணிட்டு கார் எடுத்துட்டு குடும்பத்தோட வந்தான். ஆம்பிளைங்க ஹாஸ்டலுக்கு பொண்டாட்டியோட இது வரைக்கும் வந்ததே இல்லை. நாங்க எல்லாம் வார்டன் குழந்தையை தூக்கி கொஞ்சிட்டு இருந்தோம். "அய்யிரே, இனிமேலாவது மத்தவன் மாதிரி சமைப்பியாலே?" "ஸார், என் உயிரே போனாலும் உத்யோக தர்மத்தை மீறமாட்டேன்". "ஒண்ணு பண்ணுவே..ருசியா சமைக்க வேணும்னா எங்க சாந்தோம் சர்ச்சுல வந்து வக்கணையா, ருசியா சமைச்சு போடு.. என் வைஃப்தான் சர்ச்சுல செகரட்டரி; பாஸ்டர்கிட்ட பேசி உனக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்லே". "மன்னிக்கணும் சார். நளனும், பீமனும் பண்ணின கலையை சரஸ்வதி கடாட்சம் உள்ள இடம்கறதால இங்க பண்றேன், சர்ச்சலெல்லாம் பண்றதுக்கில்லை ஸார்.. நான் எச்சை தட்டே அலம்பிண்டிருந்தாலும் பரவாயில்லை". வார்டனின் மனைவி குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு கிடுகிடுவென காரில் சென்று அமர்ந்தார். ஒரு சாதாரண சமையல் கலைஞனின் முன் தன் கணவனின் பணம், பெரும்படிப்பு, பதவி, அந்தஸ்து எல்லாமே தோற்றதை தாங்க முடியவில்லை.
"எதுக்குய்யா மூஞ்சில அடிச்சாப்பல பேசின? படிப்புக்கு மரியாதை தரவேணாம்?"
"இல்லே..அன்னிக்கு என் தோப்பனாரை அவன் இவன்னு பேசினது மனசுல முள்ளாத் தச்சுட்டு இருந்தது"
"அந்தாளே ஒரு சாடிஸ்ட்டு.. என்ன பண்ணுவாரோ?"
"இப்பவே ரொம்ப மோசாமாதான் இருக்கேன். இதைவிட மோசமா என்ன பண்ணிட முடியும்?ன்னுதான்".
வார்டனால் முடிந்தது. 'ஏண்டா சர்ச்சல சமைக்க மாட்டியா? பெரிய ஜில்லா கலெக்டரா நீ?' ன்னு கருவிகிட்டு கிடந்த வார்டன், வேணுமுன்னே அய்யரை நான்வெஜ் மெஸ்ஸுக்கு மாத்திவிட்டான்.. வெஜ் மெஸ்ஸுல சாப்பிடக்கூட அவருக்கு அனுமதி இல்லைன்னுப்புட்டான் படுபாவி.. அய்யரை சிக்கன் சாப்பிட்ட தட்டெல்லாம் எலும்பு பொருக்கி கழுவ சொன்னான்..
அய்யோ... சே... அப்புறம் என்னாச்சு? அன்னிக்கே வேலையவுட்டு போயிட்டாரா?
இல்ல, இசக்கி, ஏழுமலைக்கிட்ட பேசி மார்னிங் ஷிப்ட் மாத்திட்டாரு. மதியம், ராத்திரில மட்டும்தானே நான்வெஜ்? ஆனா கார்த்தால டிபன் எப்பவும் சைவம் தான?. நடுராத்திரி 12 மணிக்கு காய்கறி நறுக்கி, மாவரைச்சு வச்சுட்டு வருவார். மறுபடியும் விடிகாலை சமைக்க போயிடுவார்.
அம்மாவுக்கு குணம் ஆகிற வரைக்கும் என்ன கேவலப்பட்டாலும் போமாட்டேன்னுட்டார். நான்வெஜ் மெஸ்ஸில் அய்யரால சாப்பிட முடியாது. கார்த்தால டிபன் மட்டும் சாப்பிடுவார்; மதியம், ராத்திரி சாப்பாடு இல்லை; தூக்கமும் இல்லை; திறமைக்கு மரியாதை இல்லை; நல்ல சம்பளமும் இல்லை; அஞ்சு நிமிஷம் ஓய்வில்லை. கடமையை மட்டும் தவறாம செஞ்சார். .. அய்யரு பாட்டுக்கு சமாளிச்சுட்டாரு, கஷ்டப்பட்டா மாதிரி தெரியலைங்கிறதுனால வார்டனுக்கு பழி வாங்கின திருப்தி கிடைக்கல..காத்துட்டு இருந்திருக்கான்..
அப்படியே ஒரு மாசம் ஓடிச்சு..சாப்பிடாம இளைச்சு பூட்டாரு அய்யரு. அன்னிக்கு டிஸ்க்ரீட் மாதேமட்டிக்ஸ் பரீட்சைக்கு படிசுட்டு இருந்தோம். போயி டீ சாப்பிடலாம்னு கேண்டீனுக்கு போனோம்.. அங்க பார்த்தா கேண்டீனுக்கு சாம்ராஜ் கூட ரேடியேஷனல் பிஸிக்ஸ் பைனல் இயர் படிக்குற ஜெனிதாவோட அண்ணன் கையில கல்யாணப் பத்திரிகையோட வந்திருந்தார். அவரு போலீஸ் இன்ஸ்பெக்டராம். ஜெனிதாவுக்கு கல்யாணம், அதனால 10 நாள் தள்ளி, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பிராஜக்ட் வைவா வோஸ் வைங்கன்னு கேட்டாரு. அதெல்லாம் முடியாதுன்னு முதல்ல சொன்ன சாம்ராஜ், இங்க ஒரு சமையல் காரப்பய இருக்கான்,ரொம்ப பிரச்சனை பன்றான், அவனை ஏதாவது செய்யணும்னு சொன்னான். ஜெனிதாவோட அண்ணன் "சார் கல்யாணம் முடியட்டும்.. மே நாலாம் தேதி அவனை ஹாஸ்டல்ல சைக்கிள் திருடிட்டான்னு சொல்லி கைய, காலை உடைச்சிடுறேன்" னு சொன்னான். படுபாவிங்க ரெண்டு பேரும் கைகொடுத்துட்டு போயிட்டாங்க. இதைக்கேட்ட எங்களுக்கு பக்குன்னு ஆயிப்போச்சு. இதை வெளில சொன்னா எங்களுக்கும் ஆபத்து. சொல்லலைன்னா அய்யரு ஜெயிலுக்கு போவாரு.. என்ன செய்யலாம்?
அய்யரு மாவரைச்சு, பாத்திரமெல்லாம் தேய்ச்சு, தட்டெல்லாம் அலம்பி வச்சுட்டு ஹாஸ்டலுக்கு படுத்துக்க ராத்திரி 12 மணிக்கு வந்தார். நாங்க எல்லாரும் ஆளுக்கு 5 ரூபாய் போட்டு 80 ரூபாய் சேர்த்து கொடுத்தோம். ஏன்னு சொல்லாம, "அண்ணே விடிகாத்தால நீங்க சொல்லாம கொள்ளாம நீங்க கிளம்பிடுங்க, இந்த காலேஜ் ஓத்துவராது"ன்னு சொன்னோம். அவரு கண் கலங்கி பணத்தை வாங்கிக்கிட்டாரு. பையிலிருந்து ஒரு சாமி படத்தை எடுத்தாரு. சிருங்கேரி அம்மனாம். "அம்மா சாரதாம்பா.. கண் தெறந்து பாறேன்.. நான் இன்னும் உயிரோடதான் இருக்கணுமா? அம்மா கண் திறம்மா" ன்னு குலுங்கிக் குலுங்கி அழுதார். அப்படியே குளிச்சுப்புட்டு மொட்டைமாடிக்கு போயி நிலாவை வெறிச்சுப் பார்த்துட்டே தூங்கிட்டார். எங்களுக்கு மெல்லவும் முடியல, முழுங்கவும் முடியல. டென்ஷன்லயே ஒரு வாரம் ஓடிச்சு.. அடுத்த வாரம், அன்னிக்கு மே 1 லீவு.. வார்டன் அவனோட சைக்கிளை கொண்டுவந்து ஹாஸ்டல்ல நிறுத்தினான். இன்னும் மூணு நாள்ல போலீஸ் வரப்போவுது..
சங்கரிடம் நான் எதுவும் கேட்கக் கூட தோணவில்லை. கொஞ்ச நேரம் மயான அமைதி.. பெரு மூச்சு.. சங்கரே தொடர்ந்தான்.
ஆனா நல்லவேளை அன்னிக்கே அம்மா கண் திறந்துட்டா...வழி விட்டுட்டா..
இல்லை. அய்யரோட அம்மா... கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல இறந்துட்டாங்க. அவரு பாடிய எடுத்துட்டு ஊருக்கு போயிட்டாரு.
இது நடந்து 25 வருடங்கள் ஆகின்றன. பல்கலை மாணவர்கள் வெள்ளிவிழாச் சந்திப்புக்கு (college reunion) வந்த நானும் சங்கரும் நாகையநல்லூர் செல்ல முடிவெடுத்தோம். அவர் ஹாஸ்டலுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தில் இருந்து சங்கர் முகவரி சேகரித்திருந்தான்.
அக்ரஹாரத்தில் விசாரித்ததில் ஒருவர் “நீங்களும் போலீசா? இப்போதான் ஒருத்தர் தேடிட்டு வந்தாரு.. பஜனை மடத்துலேர்ந்து ஆறாவது வீடு.. இந்த பழைய நெம்பர்லாம் செல்லாது….” என்றார்.
எப்படியோ தேடி வீட்டைக் கண்டுபிடித்தோம். பாசிபடர்ந்த சுவரில் அகல் விளக்குக்கான பிறையில் காரை பெயர்ந்து இருந்தது. வளைந்து கொடுக்கா நேர்மையின் விளைவு, வீட்டின் ஏழ்மையில் தெரிந்தது.
உள்ளே ஒரு போலீஸ்காரர், அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
எங்களை “நீங்க யாரு? எதுக்கு வந்தீங்க” என்றார் போலீஸ்.
அய்யர் பதில் சொன்னார்: “இவரு அண்ணா காலேஜ்ல நான் கேன்டீன்ல வேலை செய்யறச்சே படிச்சார்” என்று சங்கரைக் காட்டி .. “இவரு அவரோட சிநேகிதர் போலிருக்கு” என்று என்னைக் காட்டினார்.
பதற்றத்தோடு “ஸார் ஏன் சார்? எதாவது பிரச்னையா சார்?” என்று போலீசிடம் கேட்டேன்.
“இல்லல்ல… இவரோட பொண்ணு அமெரிக்கால படிச்சுட்டு இருக்கு.. இவரும் அமெரிக்கா போகப் போறாரு.. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக வந்தேன்”.
“சாராதாம்பா கண்ணைத் திறந்துட்டாடா” – கண் கலங்கினேன்.
No comments:
Post a Comment