Wednesday, October 10, 2018

வள்ளுவம் வைதிக நூலே!

(1) எண்குணத்தான் -
அபஹதபாப்மா, விஜர:, விம்ரு’த்யு:, விசோக:, விஜிகதஸ:, அபிபாஸ:, ஸத்யகாம:, ஸத்யஸங்கல்ப:,
[பாவம், மூப்பு, மரணம், துயரம், பசி-தாகம் ஆகிய குறைபாடுகளற்ற தன்மை, விருப்பம் - தீர்மானம் இவற்றில் பழுதற்ற தன்மை] ஆகிய பரம்பொருளின் எட்டுத் தன்மைகளைச் சாந்தோக்யம் பேசுகிறது. வள்ளுவம் கடவுள் வாழ்த்தில் அதையே பின்பற்றுகிறது.
(2) நிகந்தரின் வழிபடு கடவுளர் ‘அறவாழி வேந்தர்’,
இது சமணர் யாத்த நிகண்டுகள் சொல்வதே, புதிய செய்தியன்று. வள்ளுவர் பெருமான் சொல்லும் கடவுள் ‘அறவாழி அந்தணன்’. நிகந்த சமயத்தினரின் அறவாழி வேந்தரை வள்ளுவம் சொல்லவில்லை. ஆதி தீர்த்தங்கரர் ரிஷப தேவர் க்ஷத்ரிய சக்ரவர்த்தி வம்சத்தவர் ஆதலால் ’அறவாழி வேந்தர்’ என அறியப்பட்டார். ஆக வள்ளுவம் நிகந்த சமயங்கள் சார்பான நூலன்று என்பது தெளிவாகிறது.
(3) சமணம் எழுதா மறையை ஒப்புக் கொள்ளவில்லை.
திருவள்ளுவதேவ நாயனார் மூவா மறை ஓத்துக்கு, வேத பாடத்துக்கு முதன்மை தந்து பேசுபவர் -"மறப்பினும் ஓத்துக் கொளலாகும்....."
மறைக்கு ஏன் வள்ளுவம் முக்கியத்துவம் தர வேண்டும் ?
யார் மறந்தால் என்ன ?
யார் அதை நினைவிற் கொண்டால் என்ன ?
சமணம் அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டாம்;
ஆனால் வள்ளுவம் கவல்கிறது.
(4) சமணம் கடவுட்கொள்கையை மறுக்கிறது; தென் புலத்தார் கடன் சமணத்தில் அறவே இல்லாதது.
வள்ளுவம் வலிந்து பஞ்ச மஹாயஜ்ஞத்தைப் பகர்கிறது-
"தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்,
தான் என்றாங்கு ........................"
"முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத் தப்பிய .. " [தெய்வ மூடம், தீர்த்த மூடம், பாகண்ட மூடம்] தெய்வ மூடம் எனும் சமணத் தடைக்கு முரணானவை தென்புலத்தார், தெய்வம் தொழுதல்; ஆனால் வள்ளுவம் பெரிதும் அவற்றை வற்புறுத்துகிறது.
(5) மறை வகுத்த ஆசிரம முறைகளைச் சமணம் மறுக்கிறது. கர்மச் சுழற்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக [ஆஸ்ரவ] ஒருவன் கூடியவிரைவில் துறவேற்பதையே சமணம் வலியுறுத்தும்; இல்லறத்தை ஓர் அறமாகச் சமணம் ஒப்புவதில்லை. அதனால் மேலும் மேலும் கர்ம ஸஞ்சயம் மிகுதியாகும் வாய்ப்பே அதிகம் என்பது சமண நம்பிக்கை.
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்.." இங்கு மறை வகுத்த ஆசிரம நெறியைச் சுட்டுகிறது வள்ளுவம்.
'प्रजातन्तुं मा व्यवच्छेत्सीः' [சந்ததி நூலை அறுத்துவிடாதே] மறை பயின்று முடித்த மாணாக்கனை இல்லறம் ஏற்கச்சொல்கிறது, எழுதாக்கிளவி; இல்லறம் ஜைனதர்மத்துக்கு முரணானது.
(6) உழவை வலியுறுத்தும் மறைமொழியை எடுத்துக்காட்ட இயலும்; உழுதொழிலைக் குறள் வலியுறுத்துவது உலகறிந்ததே.
சமணம் உழவைப் பற்றி என்ன கூறிற்று?
(7) அறத்துக்கு முரணாகாத காமம் மறைகளும், மறைவழி நூல்களும் பேசிவரும் கருத்தே ஆகும்; நிஷேகம் [புணர்ச்சி] முக்கியமான வைதிக ஸம்ஸ்காரங்களுள் ஒன்று; இதில் எவ்விதமான பாசாங்கு - பூதஞ்சித்தனங்களும் கிடையா;
’அறம் பிறழாத காமம் எனது விபூதி’என்கிறான் கண்ணபிரான்; வள்ளுவமும் மனையறம், தாம்பத்யம் இவற்றை விவரிக்கிறது. இந்து சமுதாயத்தில் புதுமணத் தம்பதியரின் முதலிரவு அறைக்கு வெளியே மணமான குலமகளிர் கூடிக் கும்மியடித்துச் சிருங்காரம்பாடி மகிழும் வைபவம் நடைபெறும்.
(8) ‘ந ச புநராவர்த்ததே’ என உலகுக்கு மீண்டு வருதல் நேராத முக்தகதி கூறுகிறது மூவாமறை;
अनावृत्तिः शब्दादनावृत्तिः शब्दात् || (Brahma sutra IV.iv.22) ’அநாவ்ருத்தி சப்தாத்’ என இதையே இருமுறை வலியுறுத்துகிறார் வியாச முனிவர், இதுவே வள்ளுவத்தின் ‘மற்றீண்டு வாரா நெறி’ ஆகிறது.
(9) நீதிநெறி தவறாத செங்கோல், அறநெறி மாறாத அந்தணர், மாரிவளம் அனைத்துக்கும் உள்ள பிணைப்பைப் பிற மறைசார் நூல்கள் சொல்கின்றன; வள்ளுவரும் அதையே சொல்கிறார்.
’அவியுணவின் ஆன்றோர்’ என அவியுணவு பெறும் வானவரை வள்ளுவம் சொல்லும்; அவியுணவு தருவது சமண அறத்தில் இல்லாத வழக்கம்.
குறள் கருத்துகள் பொதிந்த மனுநூல், மஹாபாரத சுலோகங்களையும் முன்பு எடுத்துக் காட்டியுள்ளேன்.
வள்ளுவம் வலியுறுத்துவது சமணத்துக்கு முரணான வேத சமயமே என்றோர்க!
”செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே!”
- திருவள்ளுவ மாலை